

கடலூர்: கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.
இதையொட்டி, கடலூர் முதுநகர்காந்தி பூங்காவில் நடந்த நிகழ்வில், அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எம்எல்ஏ கோ.ஐயப்பன், கடலூர் மாவட்ட ஆட்சியர் தருண் தம்புராஜ், எஸ்.பி.ரா.ராஜாராம், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன், அஞ்சலையம்மாளின் கொள்ளுப் பேத்தி இளவரசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச்செயலாளர் மாதவன் பங்கேற்றனர்.
சிறு வயது முதலே சுதந்திரப் பற்று மிக்கவராகத் திகழ்ந்த அஞ்சலையம்மாள், 1921-ல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, சென்னையில் ஆங்கிலேய படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம், அந்நிய ஆடை எதிர்ப்புப் போராட்டம், 1940-ல் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்று சிறைக்குச் சென்றார்.
‘தென்னாட்டின் ஜான்சி ராணி’ என்று மகாத்மா காந்தியால் போற்றப்பட்ட அஞ்சலையம்மாள், விடுதலைப் போராட்டத்துக்காக தனது குடும்ப சொத்துகளையும், குடியிருந்த வீட்டையும் விற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி இவர். மூன்றுமுறை எம்எல்ஏ-வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன், எம்எல்ஏ நா.எழிலன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் இரா.செல்வராஜ், செய்தி-மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் கலந்துகொண்டனர்.