Published : 03 Nov 2023 06:01 AM
Last Updated : 03 Nov 2023 06:01 AM
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 23 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று சென்னை மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு மழை நீர்தேங்கிய பகுதிகளில் இந்த ஆண்டு மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 92 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் 10 நாட்களில் முடிக்கப்படும். மாநகராட்சி சார்பில் 33 கால்வாய்களில் 53.42 கிமீ நீளத்துக்கும், நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள 15 கால்வாய்களில் 107.06 கிமீ நீளத்துக்கும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. தேங்கும் மழைநீரை வெளியேற்ற 845 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிப் பள்ளிகள், சமூகநலக் கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் 169 நிவாரண மையங்களும், ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு உணவு சமைக்கும் வகையில் சிந்தாதிரிப்பேட்டையில் பொது சமையல் கூடமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சியில் மழைக்கால பணிகளை மேற்கொள்ள 23 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1913, 044-2561 9204, 044-2561 9206 மற்றும் 044-2561 9207 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர்கள் சங்கர்லால் குமாவத் (சுகாதாரம்), ஆர்.லலிதா (வருவாய் மற்றும் நிதி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT