Published : 04 Jan 2018 08:57 AM
Last Updated : 04 Jan 2018 08:57 AM

ஏகாம்பரநாதர் கோயிலில் 92.75 கிலோ தங்கம் மோசடியா? - தங்கம் கொடுத்தோரின் விவரங்களை சேகரிக்க முடிவு: சிலையை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கும் கடிதம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 87 கிலோ தங்கம் கொண்ட பழைய சிலையில் தங்கம் இல்லாததாலும், புதிய சிலை 5.75 கிலோ தங்கம் சேர்க்கப்படாமல் உள்ளதாலும் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சிலை தயாரிக்க தங்கம் தானமாக கொடுத்தவர்களின் விவரங்களைச் சேகரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஏகாம்பரநாதர் கோயிலில் 1300 ஆண்டு பழமை வாய்ந்த சோமாஸ் கந்தர் சிலை உள்ளது. இந்தச் சிலை 115 கிலோ எடை கொண்டது. அதில் 87 கிலோ அளவுக்கு தங்கம் இருப்பதாக பக்தர்களால் கூறப்பட்டது. இதனைத் தலைமை ஸ்தபதி முத்தையாவும் உறுதிப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பழமை வாய்ந்த இந்தச் சிலை சேதமடைந்ததாகக் கூறி புதிய சிலை தயாரிக்க கடந்த 2015-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் பழைய சிலையில் அதிக அளவு தங்கம் உள்ளது. அதில் மோசடி செய்யும் நோக்கத்தில் புதிய சிலை தயாரிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி புதிய சிலை தயாரிக்கப்பட்டது.

9 பேர் மீது வழக்கு

இந்நிலையில் புதிய சிலையில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்குத் தங்கம் இல்லை என்று அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்தப் புகார் மனு மீது நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த மாசிலாமணி உட்பட 9 பேர் மீது சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர்கள் தற்போது விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்:

புதிய சிலையில் எந்த அளவுக்கு தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சோதனை நடத்த வந்த சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் அதனைச் சோதனை செய்யும்போது அதில் தங்கம் சிறிதும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழைய சோமாஸ் ஸ்கந்தர் சிலையை ஆய்வு செய்யும்போது அதிலும் துளியும் தங்கம் இல்லை.

ஆனால், 87 கிலோ தங்கம் அச்சிலையில் இருப்பதாக ஸ்தபதி முத்தையா ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் சிலை மாற்றப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது உள்ள சிலை பழங்காலத்துச் சிலைதானா? அல்லது மாற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தொல்லியல் துறையின் அறிக்கைக்கு பிறகே எப்போது மாற்றப்பட்டது என்பது தொடர்பான விசாரணையும், அதில் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கையும் இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

விரைவில் விசாரணை

அதேபோல் புதிய சிலையில் 5.75 கிலோ தங்கம் சேர்க்க வேண்டும். அதிலும் அந்த அளவுக்குத் தங்கம் இல்லை. இந்தச் சிலை தயாரிக்க 100 கிலோவுக்கும் அதிகமாகத் தங்கம் வசூலிக்கப்பட்டதாக அண்ணாமலை புகாரில் தெரிவித்துள்ளார். இந்தச் சிலையிலும் தங்கம் இல்லை. எனவே இந்தச் சிலை தயாரிக்கத் தங்கம் கொடுத்தவர்கள் யார்; எவ்வளவு தங்கம் கொடுத்தனர் என்ற விவரங்களைச் சேகரிக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். எனவே தங்கம் தானமாகக் கொடுத்தவர்களிடம் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.

87 கிலோ தங்கம் கொண்ட பழைய சிலை மாற்றப்பட்டிருப் பதாலும், புதிய சிலையில் 5.75 கிலோ தங்கம் சேர்க்கப்படாமல் உள்ளதால் மொத்தமாக 92.75 கிலோ அளவுக்கு மோசடி நடைபெற்றிருக்கலாம் என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, “87 கிலோ எடை கொண்ட பழைய சிலையில் தங்கம் இல்லை. இதனால் இந்தச் சிலை மாற்றப்பட்டுள்ளதா என சோதனை நடத்துமாறு தொல்லியல் துறையிடம் கேட்டுள்ளோம். அதேபோல் புதிதாக செய்யப்பட்ட சிலையிலும் தங்கம் சேர்க்கப்படவில்லை. அதில் 5.75 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எனவே தங்கம் தானமாக கொடுத்தவர்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளது. அதன்பிறகே இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். ஏற்கெனவே இந்த வழக்கில் 9 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முறைகேடுகள் உறுதியானால் முறைகேட்டில் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரமணியிடம் கேட்டபோது, “இந்த வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது கைது நடவடிக்கை எதுவும் இல்லை” என்றார்.

திருவாச்சி வழக்கு

இந்தக் கோயிலின் திருவாச்சி ஒன்று காணாமல் போயுள்ளதாக தினேஷ் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் தனியாக ஒரு வழக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கையும் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். உண்மையான திருவாச்சி கோயிலில் உள்ளதா என்றும் விரைவில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x