‘நெல்லையில் சாதிவெறியாட்டம்’ - வழக்கை விரைந்து விசாரிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

‘நெல்லையில் சாதிவெறியாட்டம்’ - வழக்கை விரைந்து விசாரிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ''நெல்லை அருகே சாதிவெறியாட்டம் நடத்தி சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியது அநாகரிகம். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது'' என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை மாவட்டம் மணிமுத்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறி கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.

சாதிவெறி கொண்ட அந்தச் சமூக விரோதக் கும்பல் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் அந்த இளைஞர்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து அலைபேசிகள், இருசக்கர வண்டி மற்றும் பணமெடுக்கும் ஏடிஎம் அட்டை போன்றவற்றைப் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆடையில்லாமலேயே அவர்கள் அங்கிருந்து தப்பித்து வீடுவந்து சேர்ந்துள்ளனர். அதன்பின்னரே காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து
காவல் துறையினர் சாதிவெறி கும்பலை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அதேவேளையில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன? - திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் மனோஜ்குமார் (21). இவரது உறவினர் சேகர் மகன் மாரியப்பன்(19). இருவரும் தொழிலாளிகள். கடந்த 30-ம் தேதி இரவு இருவரும் மணிமூர்த்தீஸ்வரத்தில் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் இருவரையும் வழிமறித்து, கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்ததாகவும், அவர்களை மிரட்டி 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அக்கும்பலிடமிருந்து தப்பிய இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், தச்சநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

பட்டியலின இளைஞர்கள் 2 பேரைசாதியைச் சொல்லித் திட்டியது, அவர்கள் மீது சிறுநீர் கழித்து, கொடூரமாகத் தாக்கியது தொடர்பாக, தாழையூத்து பொன்னுமணி(25), திருமலைக்கொழுந்துபுரம் நல்லமுத்து(21), ஆயிரம்(19), ராமர்(22), சிவா(22), லட்சுமணன் (20)ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in