

புதுச்சேரி: ‘பிறந்த நாள் காணும் எங்கள் விசுவாசமே, எங்கள் காவலரே, எங்கள் நம்பிக்கையே, எங்கள் நேர்மையே...’ என வளர்ப்பு நாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து என்று கூறி வைக்கப்பட்ட பேனரை புதுச்சேரி போலீஸார் அகற்றினர்.
புதுச்சேரி நகரெங்கும் பேனர்கள் அதிகளவில் வைக்கப்படுகின்றன. இதில் பிறந்த நாள் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளுக்கும் சாலையெங்கும் பேனர்கள் வைக்காத அரசியல் கட்சியினரே இல்லை. அவர்களுக்கு போட்டியாக பலரும் பிறந்த நாள், திருமண நாள் நிகழ்வுகளை பேனர்களாக வைப்பார்கள். குறிப்பாக சிக்னல்களை மறைத்தப்படி வைப்பது தான் பலருக்கும் இடையில் போட்டி நடக்கும்.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக் ராஜ். இவர் பேச இயலாதவர்களுக்கான குரல் (voice for voiceless) என்ற விலங்குகள் நல அமைப்பு வைத்து நடத்தி வருகின்றார். இவர் நேற்று இரவு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜிவ் காந்தி சதுக்கத்தில் நாய் படம் போட்ட கட் அவுட் வைத்துள்ளார். அதில், "பிறந்த நாள் காணும் எங்கள் விசுவாசமே, எங்கள் காவலரே, எங்கள் நம்பிக்கையே, எங்கள் நேர்மையே" என அச்சிடப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு நின்று விலங்குகள் நல ஆர்வலர், "இந்த வார்த்தை எல்லாம் நாய்களுக்குத்தான் பொருந்தும், அதற்கான விழிப்புணர்வு மட்டும்தான், யாரையும் புண்படுத்த இல்லை என்றும் அனைத்து நாட்டு நாய்களுக்கும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பதற்கத்தான்" என்றும் வீடியோ பேசி வெளியிட்டார். இந்த நிலையில், இன்று காலை நாய்க்காக வைக்கப்பட்ட பேனரை போலீஸார் அகற்றிச் சென்றனர்.
இதுபற்றி அசோக் ராஜ் கூறுகையில், "நோணாங்குப்பத்தில் சாலையோரம் கிடந்த நாய்க் குட்டியை எடுத்து வளர்த்தேன். அதற்கு நான்கு வயது ஆனது. எல்லாரும் பேனர் வைப்பது போல் எனது நாய்க் குட்டிக்கும் பேனர் வைத்தேன். ஆசைக்காக தான் நான் வளர்க்கும் நாய்க்கு பேனர் வைத்தேன். அதிலுள்ள வாசகங்களும் நாய்க் குட்டிகளுக்கு தான் பொருந்தும். ஊரெங்கும் பேனர் எங்கேயும் இருந்தாலும் என் நாய்க் குட்டிக்கு வைத்த பேனரை மட்டும் போலீஸார் எடுத்து சென்று விட்டனர். போலீஸ் நிலைய வாசலில் கூட பேனர் இருக்கிறது. ஆனால் ஏன் எடுத்தார்கள் என்று கேட்டதற்கும் பதில் சொல்லவில்லை" என்றார்.