Published : 02 Nov 2023 03:20 PM
Last Updated : 02 Nov 2023 03:20 PM

சென்னையில் ரயில் நிலையங்களை ஒட்டி அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்களால் பொதுமக்களுக்கு சிரமம்

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஈவிஆர் பெரியார் சாலையில் பிற வாகனங்களுக்கு இடையூறாக வரிசைகட்டி நிற்கும் ஆட்டோக்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் உட்பட முக்கிய ரயில் நிலையங்கள் வெளியே சாலைகளை ஒட்டி, சவாரிக்காக ஆட்டோக்கள் வரிசைக்கட்டி நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் முக்கிய மற்றும் பெரிய ரயில் நிலையங்களாக சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் உள்ளன.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்தும், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்தும் புறப்படுகின்றன. இதுதவிர, கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதுபோல, சென்னை - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு முக்கிய முனையமாக சென்ட்ரல் ரயில்நிலையம் திகழ்கிறது. இதன் காரணமாக, இந்த 2 ரயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த ரயில் நிலையங்களுக்கு வெளியே சாலையை ஒட்டி நிறுத்தப்படும் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் தென் பகுதியில் காந்தி-இர்வின் சாலையை ஒட்டி நிலையத்தின் நுழைவு பகுதியில் தினசரி காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அங்கும் இங்குமாக நிறுத்தப்படுகின்றன. இதுபோல, நிலையத்தின் அருகே பேருந்து நிறுத்தப் பகுதியிலும் ஆட்டோக்களை நிறுத்தி சவாரிக்காக காத்து நிற்கின்றனர். இதனால், இந்த சாலையில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பெரம்பூர் ரயில்நிலையம் நுழைவாயிலில் நெரிசலை ஏற்படுத்தி வரும் ஆட்டோக்கள்.

சென்ட்ரல் ரயில் நிலையம்: சென்ட்ரல் ரயில்நிலையத்தின் வெளியே ஈவிஆர் பெரியார் சாலை, வால்டாக்ஸ் சாலையை ஒட்டிய பகுதியில் அதிகாலை முதலே 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும், நடைபாதை பகுதியிலும் ஆட்டோக்களை நிறுத்திவிட்டு ரயில் நிலையத்துக்குள் சென்றுவிடுகின்றனர். இதனால், இந்த சாலைகள் பெரும்பாலான நேரங்களில் நெரிசலில் சிக்கி ஸ்தம்பிக்கின்றன. மேலும், இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தையைப்போல ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் நகர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

செ.பால்பர்ணபாஸ்

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் செ.பால்பர்ணபாஸ் கூறியதாவது: சென்ட்ரல், எழும்பூர் என முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தினசரி அதிகாலை முதலே குறுக்கும் நெடுக்குமாக நிற்கின்றன. சில ஆட்டோக்கள் பாதசாரிகள் நடக்கும் இடத்தில் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ முறை கிடையாது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் ப்ரீபெய்டு ஆட்டோமுறை இருந்தாலும், இங்கு சரியாக செயல்படுவது இல்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகளிடம் தன்னிச்சையாக எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வசூலித்து கொள்ளலாம் என்ற நிலையே ரயில் நிலையங்களை சுற்றி ஆட்டோக்கள் பெருகுவதற்கு காரணம். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களில் எத்தனை பேர் அரசு உரிமம் வைத்து இருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய கேள்விதான். ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ முறையை செயல்படுத்த வேண்டும். ரயில் நிலையங்களுக்கு வெளியே மற்ற வாகனங்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மீது போக்குவரத்து காவல்துறை இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரகுகுமார் சூடாமணி

பெரம்பூர் நிலையம்: பெரம்பூர் ரயில் நிலையத்திலும் இதே பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதுகுறித்து பெரம்பூர் சுற்றுவட்டார மேம்பாட்டுக் குழுவின் அமைப்பாளர் ரகுகுமார் சூடாமணி கூறும்போது, "பெரம்பூர் ரயில் நிலையம் நுழைவாயில் முன்பு, தினசரி ஏராளமான ஆட்டோக்கள் நிற்கின்றன, பேருந்து நிறுத்தத்தையும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ரயில் பயணிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுகின்றனர்" என்றார்.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வடக்கு, தெற்கு நுழைவு பகுதிகளில் தலா 60 ஆட்டோக்கள் சில நிமிடங்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது பயணிகளை ஏற்றுவது அல்லது இறக்கிவிட்டு உடனே கிளம்பிவிடவேண்டும். மற்ற ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை. இதுபோல, சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்த 30 ப்ரீபெய்டு ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவணங்களை வழங்கி உள்ளனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டி காந்தி இர்வின் சாலையில் நெரிசலை
ஏற்படுத்திவரும் ஆட்டோக்கள்.

மீதமுள்ளவர்கள் தற்போதுவரை ஆவணங்கள் வழங்கவில்லை. இவர்களை தவிர, மற்ற ஆட்டோக்களுக்கு ரயில் நிலைய வளாகத்துக்குள் நிறுத்த அனுமதி கிடையாது. ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ஆட்டோக்கள் உடனடியாக சென்றுவிட வேண்டும். அதையும் மீறி ஆட்டோக்களை நிறுத்தினால், ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் தமிழக ரயில்வே போலீஸார் இணைந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

விதிமீறல் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும், ரயில் நிலையங்களை ஒட்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தொடர்கிறது. இதற்கு நிரந்த தீர்வு ஆட்டோ ஓட்டுநர்களிடம் தான் உள்ளது. அவர்களின் சுய ஒழுக்கம் மூலமாகவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்" என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘சென்ட்ரல், எழும்பூர் மட்டும் அல்லாமல் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் அவ்வப்போது அத்துமீறுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம். குற்றத்தின் தன்மையை பொறுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு தேவைப்பட்டால் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்து கைதும் செய்கிறோம். ஆட்டோ ஓட்டுநர்களின் அத்துமீறலால் பயணிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x