

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகில் கடந்த 20-ம் தேதி பாஜக கொடி கம்பம் நடப்பட்டது. இதனை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால், பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனமும்சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டிஉட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், போலீஸார் நடத்திய தடியடியில் பாஜக நிர்வாகி விவின் பாஸ்கர் காயமடைந்தார்.
இதைத்தொடர்ந்து , இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 10,000 கொடிக் கம்பங்கள் நடப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
நவ.1-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 100 கொடிக் கம்பங்கள் நடப்படும் என்றும், 100-வது நாளானபிப்.8-ம் தேதி பனையூரில் கொடிக் கம்பம் அகற்றப்பட்ட அதே இடத்தில், போலீஸ் தடியடியில் காயமடைந்த விவின் பாஸ்கர் முன்னிலையில் கொடிக் கம்பம் நடப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் கொடிக் கம்பம் நடும் பணியை மேற்கொண்டனர்.
சென்னையை பொறுத்தவரை திருவொற்றியூர், ராயபுரம், ஆர்கே நகர், கொளத்தூர், மதுரவாயல், மாதவரம், அம்பத்தூர், ராமாபுரம் உட்பட 42 இடங்களில் மாவட்ட தலைவர்கள் ஏற்பாட்டில் கொடிக் கம்பம் நடும் நடவடிக்கையை பாஜகவினர் மேற்கொண்டனர். ஆனால்,மாநகராட்சி மற்றும் காவல் துறைஅனுமதியின்றி கொடிக் கம்பம் நடமுயன்றதாக போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், சில இடங்களில் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சில இடங்களில் மட்டும் பாஜகவினர் பழைய கொடிக் கம்பங்களை பிடுங்கி, புதிய கொடிக்கம்பங்கள் நட்டதாக தெரிகிறது.இதனால், அதற்கு மட்டும் போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், கோவை, திண்டுக்கல் உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொடிக் கம்பம் நட முயன்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன்கூறும்போது, ‘தமிழகம் முழுவதும்நேற்று 700-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடிக் கம்பம் நட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பலஇடங்களில் கொடிக் கம்பம் நடுவதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதில் பாஜகவினர் 1,540 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிகரமாக கொடிக் கம்பம் நடப்பட்டுவிட்டது. அனுமதி அளிக்கப்படாத இடங்களில் அனுமதி கோரி மீண்டும் அதிகாரிகளிடம் மனு அளிக்க இருக்கிறோம். கொடிக்கம்பம் நடுவது ஒரு நாளுடன் நின்றுவிடாது. தொடர்ந்து 100 நாட்கள் இதுபோல, தமிழகம் முழுவதும் கொடி கம்பம் நடப்படும்’ என்றார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு:
தமிழகம் முழுவதும் பாஜக கொடிக் கம்பம் அமைத்து கொடியேற்ற முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறேன். மற்றகட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக் கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் தமிழக பாஜக பின்வாங்கபோவதில்லை. 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பை கண்டுபயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. திமுகவுக்கு மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் என்றார்.