Published : 02 Nov 2023 05:43 AM
Last Updated : 02 Nov 2023 05:43 AM
மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா தியான பீடம் சார்பில், நித்யானந்தாவின் பவர் ஏஜென்ட் ஏ.சி.நரேந்திரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக 2012-ல் அப்போதைய ஆதீனம் என்னை நியமித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த அறிவிப்பை 2019-ல்ஆதீனம் திரும்பப் பெற்றார். இதற்கு எதிரான வழக்கு, மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் 2021 ஆகஸ்ட் 12-ல் காலமானார். முறைப்படி அவருக்குப் பின் நான்தான் மதுரை ஆதீனமாகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக ஒப்பந்தம், உயில் ஏதுமின்றி மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை ஏற்க முடியாது.
இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அருணாகிரிநாதருக்கு பதிலாக ஞானசம்பந்த தேசிகபரமாச்சாரிய சுவாமி சேர்க்கப்பட்டுள்ளார். இதை ரத்து செய்துஉத்தரவிட வேண்டும். இவ்வாறுமனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நித்யானந்தா வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக மதுரை ஆதீனம், அறநிலையத் துறை ஆணையர் பதில் அளிக்க வேண்டும். மேலும், மனுதாரர் நித்யானந்தாவின் பவர்ஏஜென்ட் என்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT