காமராசர் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு: தமிழக ஆளுநருக்கு பலத்த பாதுகாப்பு

காமராசர் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு: தமிழக ஆளுநருக்கு பலத்த பாதுகாப்பு
Updated on
1 min read

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான பரிந்துரைக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல்அளிக்காததால் எழுந்துள்ள சர்ச்சை காரணமாக, இன்று நடைபெறும் மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலை. வளாகத்தில் இன்று (நவ. 2) காலை 10.30மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் ஜெ.குமார், பதிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய் துள்ளனர்.

விடுதலைப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கஆட்சிமன்றக் குழு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்ததாக தகவல் வெளியானதைஅடுத்து, ஆளுநரைக் கண்டித்து மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் பல்கலை. நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், பல்கலை. அலுவலர்கள், பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பல்கலை. பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், ஆளுநரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி காட்டப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து, மதுரை விமான நிலையம், ஆளுநர் வரும் வழி மற்றும் பல்கலை.யில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்து கூற முடியாது...: இதுகுறித்து பல்கலை. நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, "சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க இருமுறை ஆட்சிக் குழு ஒப்புதல் பெற்று அனுப்பியதை ஆளுநர் ரவி நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி நாங்கள் கருத்து கூற முடியாது. ஆனால், திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழா நடைபெறும். ஏற்கெனவே ஒருமுறை நடந்த பட்டமளிப்பு விழாவில், மத்திய அமைச்சர் பங்கேற்றார். அப்போதும் மாநில அமைச்சர் விழாவைப் புறக்கணித்த நிகழ்வு நடந்துள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in