

மேட்டூர்: மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே காவேரிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 136 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் மனிதக் கழிவை பூசி மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கோட்டாட்சியர், டிஎஸ்பி, வட்டாட்சியர், மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தற்போது, பள்ளியில் தூய்மைப் பணிகள், சுற்றுச் சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, பள்ளியில் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் 12 பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால் மது அருந்துவோரின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருகின்றன.
காவேரிபுரம் அரசுப் பள்ளியில் மனிதக் கழிவுகளை பூசி சென்ற மர்ம நபர்கள் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. அசாதாரண சூழல் நிலவும் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதோடு, ஒப்பந்த அடிப்படையில் இரவுக் காவலாளியை நியமித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என்றார்.