

சென்னை: தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்றமுத்துராமலிங்க தேவர் குருபூஜையும் எவ்விதமான அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற்றுமுடிந்துள்ளது. போலீஸார் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை மற்றும் திட்டமிட்ட பணியே இவ்வெற்றிக்கு காரணம் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில், குறிப்பாக சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று காலை ஆலோசனைநடத்தினார். இதில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண்,காவல் ஆணையர்கள் சந்தீப் ராய் ரத்தோர்(சென்னை), அமல்ராஜ் (தாம்பரம்), சங்கர் (ஆவடி) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டிப் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் எங்கேயும் இது போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெற்று விடக்கூடாது. தலைமறைவு ரவுடிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சம் இன்றிநடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ள நபர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறையில் இருந்து பிணையில் வெளியே வரும் ரவுடிகள் மட்டும் அல்லாமல் சிறைக்குள் இருப்பவர்களின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.
முன்விரோத கொலைகள், ஜாதி, மத மோதல்கள் எக்காரணம் கொண்டும் நடைபெறாதபடி விழிப்புடன் இருக்க வேண்டும். ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீதுஇரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.