ரயில் நிலையங்களில் நடைபெற்ற மோதல் விவகாரம்: மாநிலக் கல்லூரி மாணவர்கள் 26 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்

ரயில் நிலையங்களில் நடைபெற்ற மோதல் விவகாரம்: மாநிலக் கல்லூரி மாணவர்கள் 26 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்
Updated on
1 min read

சென்னை: ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபட்ட சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் 26 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில் மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, கடற்கரை ரயில் நிலையங்களில் குழுவாக சேர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ரயில்வே காவல் நிலையங்கள் சார்பில் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதியப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்ட 48 மணி நேரத்தில் அந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

அதன்படி மாநிலக் கல்லூரியில் 26 மாணவர்கள் தற்போது தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக கல்லூரியின் பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘நடவடிக்கை எடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு பெற்றோருடன் நேரில் வந்து விளக்கம் தரவேண்டும்.

மாணவர் தரும் விளக்கம், அவரின் வருகைப்பதிவு, கற்றல் நிலை ஆகியவற்றை கொண்டு கல்லூரியில் இருந்து நீக்கப்படுவது குறித்த முடிவெடுக்கப்படும். அந்த வகையில் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 26 பேரில் பலர் நீண்டகாலமாக கல்லூரிக்கு வராதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது’’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in