

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் காரை நோக்கி கல் வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் நேற்று முன்தினம் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பின்னர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
பசும்பொன்னில் உள்ள ஒரு தோட்டப் பகுதியில் நின்று கொண்டிருந்த வடுகபட்டியைச் சேர்ந்த முத்துமாரி(45) என்பவர், பழனிசாமியின் காரை நோக்கி கல் எறிந்தார். போலீஸார் அவரைப் பிடித்த பின்னர், பழனிசாமியை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தனிப் பிரிவு காவலர் அன்வர் ஜமால் அளித்தபுகாரின்பேரில், கமுதி போலீஸார் முத்துமாரியைக் கைது செய்தனர்.
இதேபோல, பசும்பொன் தெப்பக்குளம் பகுதியில் கடலாடி தாலுகா சின்னபொதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி(44) என்பவர், பழனிசாமி காரை நோக்கி கல் வீசினார். இதுகுறித்து காவலர் வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், கமுதி போலீஸார் ராஜீவ்காந்தியைக் கைது செய்தனர்.