

சென்னை: பறக்கும் ரயில் வழித்தடத்தில் சென்னை வேளச்சேரி - பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான இரும்புத் தூண்களை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளச்சேரி - பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான பணிகள் ரூ.734.01 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 கி.மீ. தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன. 500 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பணிகள் பாக்கி உள்ளன.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் உயர்மட்ட மேம்பாலத்தில் ரயில் பாதைகள் அமைக்க 6 இரும்புத் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி, 3 இரும்புத் தூண்களை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 50 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்ட இந்த இரும்புத் தூண்களை பொருத்தும் பணியில் 100 பொறியாளர்கள் மற்றும் 6 ராட்சத கிரேன்கள் ஈடுபட்டன. எஞ்சிய 3 இரும்புத் தூண்கள் இன்று அமைக் கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2ல் மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித் தடம் பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக செல்கிறது. இதற்கான ரயில் பாதை, தற்போது அமைக்கப்படும் வேளச்சேரி பறக்கும் ரயில் பாதைக்கு மேல் உயர்மட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
எனவே, இதைப் பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கும். அத்துடன், பறக்கும் ரயில், கடற்கரை-தாம்பரம் ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிகள், ரயில் மாறி பயணம் செய்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு முக்கிய முனையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.