Published : 01 Nov 2023 04:06 AM
Last Updated : 01 Nov 2023 04:06 AM

அமைதியாக முடிந்த தேவர் குருபூஜை விழா: பொதுமக்களுக்கு தென்மண்டல ஐஜி நன்றி

ஐஜி நரேந்திரன் நாயர்

ராமநாதபுரம்: பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிந்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொது மக்களுக்கு தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் நன்றி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவாின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குரு பூஜை விழா அக். 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. அக்.30 அன்று தேவர் நினைவிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

அன்றைய தினம் தமிழக டிஜிபி சங்கர் ஜூவால், தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்க துரை தலைமையில் 5 டிஐஜிகள், 25 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 12,000 போலீஸார் பசும்பொன் மற்றும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தாண்டு தேவர் குரு பூஜை விழா அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெற்று முடிந்தது.

இது குறித்து தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் அறிக்கை மூலம் கூறியிருப்பதாவது: 3 நாட்கள் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பிலும் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்று நிறைவடைந்தது.

இவ்விழா சிறப்பாக நடை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் விதி முறைகளைக் கடைப் பிடித்து ஒத்துழைப்பு வழங்கிய விழாக் குழுவினருக்கும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் காவல் துறையின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x