

சென்னை: ஆந்திர ரயில் விபத்தை தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் நேற்று மாலை நிலவரப்படி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரயில்கள் மோதி நிகழ்ந்த விபத்தை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்தாண்டு ஜூன் மாதம் பாலசோர் ரயில் விபத்து ஏற்பட்டு, சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணி மனமிறங்குகிறேன். பெருவாரியான இந்தியர்கள் தங்களின் பயணத்துக்காக ரயில்களையே சார்ந்திருக்கும் சூழலில் குறுகிய கால இடைவெளியில் விபத்துகள் தொடர்கதையாவது மிகுந்த கவலையளிக்கிறது. ரயில்வே பாதுகாப்பு முறைகளை உடனடியாக மத்திய அரசு மீளாய்வு செய்து, மேம்படுத்திப் பயணிகளின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது துரதிஷ்டவசமானது. ரயில்வே நிர்வாகம் ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். எந்த நிமிடமும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இனிமேலும் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்த செய்திவேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவில் நடைபெற்றுள்ள இந்த விபத்து, ரயிலில் பயணிப்போர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசும், ரயில்வே துறையும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.