

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1963-ல் தேவர் மறைந்தபோது அண்ணாவும், கருணாநிதியும் நேரில் வருகை தந்து அஞ்சலிசெலுத்தினர். 1969-ல் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தைப் பார்வையிட்டு அங்கு அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளைச் செய்தவர் கருணாநிதி.
2007-ல் முதல்வராக இருந்தகருணாநிதி, தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடினார். அப்போது பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில் அணையாவிளக்கு, கலையரங்கம், புகைப்படக் கண்காட்சி, நூலகம் என பல்வேறு பணிகளை கருணாநிதி செய்தார்.
மூக்கையாத் தேவர் முயற்சியால் மதுரை கோரிப்பாளையத்தில் அமைக்கப்பட்ட தேவர் சிலையை அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியை அழைத்துவந்து திறந்து வைத்து விழா நடத்தியதும் கருணாநிதிதான். மதுரை ஆண்டாள்புரம் பாலத்துக்கு தேவர் பெயரைச் சூட்டினார். கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் தேவர் பெயரில் கல்லூரி அமையக் காரணமாகஇருந்தவர் கருணாநிதி. மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் 2021-ல் மீட்டுக் கொடுத்ததும் திமுகஆட்சிதான்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவசதியாக ரூ.1.50 கோடியில் நிரந்தரமாக 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளேன்.
ஆரியம் - திராவிடம்: இன்னாருக்கு இதுதான் என்பதுஆரியம்; எல்லோருக்கும் எல்லாம்உண்டு எனச் சொல்வது திராவிடம். இதை ஆளுநருக்குப் புரிய வைக்க வேண்டும். மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் வைக்க மத்திய அரசிடம் கோரியுள்ளோம்.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகையின் வெளியில் தெருவில்தான் வீசப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. ஆளுநர் பாரதிய ஜனதா கட்சிக்காரராகவும், ஆளுநர்மாளிகை பாஜக அலுவலகமாகவும் மாறியுள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.