Published : 12 Jan 2018 03:39 PM
Last Updated : 12 Jan 2018 03:39 PM

மத்திய அரசின் மானியம் ரத்தானதால் ரேஷன் கடைகளில் உளுந்து நிறுத்தம்: அமைச்சர் விளக்கம்

ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் நிறுத்தப்பட்டதற்கு மத்திய அரசின் மானியம் ரத்தும், விலை உயர்வும் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் பதிலளித்தார்.

ஏழை-எளிய மக்கள் அதிகம் நம்பி இருப்பது ரேஷன் கடைகளைத்தான். இலவச அரிசி , சர்க்கரை, எண்ணெய், பருப்பு, உளுந்தம்பருப்பு, கோதுமை உள்ளிட்டவைகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலவசமாகவும் , விலை குறைவாகவும் இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் ஏழை-எளிய மக்கள் ரேஷன் கடைகளை பெரிதும் நம்பி வாழ்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது. உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்தது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசு கொண்டுவந்த உணவு பாதுகாப்புத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் இத்திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

அண்மையில்தான் சர்க்கரை விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது, தற்போது ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மற்றும் ஏழை-எளிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இன்று இந்த பிரச்சனை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இனி ரேஷன் கடைகளில் உளுந்து விநியோகம் இல்லை என்று தெரிவித்தார். விலை உயர்வு, மத்திய அரசின் மானியம் நிறுத்தம் காரணமாக உளுந்து விநியோகம் இல்லை என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களை விட அதிக அளவில் பொதுவிநியோகத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் மாதம் ஒன்றுக்கு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்குதுறைக்கு கூடுதலாக 207 கோடி ரூபாய் செலவாகிறது என்று தெரிவித்தார்.

இனி உளுந்துக்கு பதில் துவரம் பருப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக வெளிச்சந்தையில் விலை வாசி உயரும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரேஷன் கடையில் நியாய விலையில் பொருட்களைக் கொடுத்து வந்தார். ஆனால் அமைச்சரின் பதில் இதற்கு முரணாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x