Published : 31 Jul 2014 09:00 AM
Last Updated : 31 Jul 2014 09:00 AM

சார் பதிவாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்: அமைச்சர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:

ஒரு குறிப்பிட்ட ஆவணம், உரிய முத்திரைத் தீர்வை மதிப்புடன் உள்ளதா என்பதை 1899-ம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 31-ன்படி சான்றளிக்கும் அதிகாரம், தற்போது மாவட்டப் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அயல் நாடுகளில் எழுதிக் கொடுத்து நமது மாநிலத்தில் பெறப்படும் பொது அதிகார ஆவணங்கள், போதிய முத்திரைத் தாளில் எழுதப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து, சான்று பெறுவதற்காக மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில், பொது அதிகார ஆவணங்களைப் பொறுத்தவரை, அவை முத்திரைத் தீர்வை மதிப்புடன் உள்ளதா என்பதைக் கண்டறிந்து சான்றளிக்கும் அதிகாரம் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் வழங்கப்படும்.

அடமான உரிமை விடுவிப்பு ஆவணங்களுக்கு சொத்தின் சந்தை மதிப்பு மீது 1 சதவீதம் முத்திரைத் தீர்வை, அதிகபட்சம் ரூ.25,000 என்ற உச்சவரம்புக்குட்பட்டு வசூலிக்கப்படுகிறது. எனினும் பதிவுக் கட்டணத்துக்கு உச்சவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் சொத்தின் சந்தை மதிப்பு மீது 1 சதவீதம் பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது.

இது முத்திரைத் தீர்வையைவிட அதிக பதிவுக் கட்டணம் வசூலிக்கும் நிலையை ஏற்படுத்துவதால், பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பதிவுக் கட்டணத்துக்கு ரூ.4,000 என உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x