Published : 31 Oct 2023 06:20 AM
Last Updated : 31 Oct 2023 06:20 AM

பொம்மிடி அருகே மலைக்கிராமத்துக்கு பேருந்து போக்குவரத்து தொடக்கம்: பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் வரவேற்ற மக்கள்

பொம்மிடி அருகேயுள்ள மலைக் கிராமமான போதக்காட்டில் இருந்து தருமபுரிக்கு அரசுப் பேருந்து இயக்கத்தை திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

அரூர்: பொம்மிடி அருகே உள்ள போதக்காடு மலைக் கிராமம் வழியாக தருமபுரிக்கு அரசுப் பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. பேருந்தை பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் பொதுமக்கள் வரவேற்றனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஏற்காடு மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் போதக்காடு, மாரியம்மன்கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் அதிகளவில் இங்கு வசிக்கின்றனர்.

தங்கள் உற்பத்தி செய்யும் விவசாய விளைப் பொருட்களை கொண்டு செல்லவும், அத்தியாவசிய தேவைக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவதற்கும் தார் சாலை மற்றும் பேருந்து வசதி இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டு வந்தனர். தார் சாலை மற்றும் பேருந்து சேவை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி மலைக்கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் தார் சாலை, பேருந்து வசதி குறித்து கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் மலைக்கிராமங் களுக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து மலைக்கிராமங் களுக்கு பேருந்து இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி பேருந்து சேவை நேற்று முதல் தொடங்கியது.

அதன்படி, போதக்காடு பகுதியில் இருந்து பையர் நத்தம், பொம்மிடி, கடத்தூர் வழியாக தருமபுரி வரை சென்று வரும் வகையில் நேற்று முதல் பேருந்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிராமத்துக்கு முதல்முறையாக வந்த பேருந்துக்கு மலைக்கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மேள தாளத்துடன் வரவேற்றனர்.

மலைக்கிராம மக்களின் நலன் கருதி பேருந்து இயக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிராம மக்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள ஏற்காடு மலைக்கிராமங்களை இணைக்கும் வகையில் தார் சாலை அமைத்து, அதிலும் பேருந்து செல்லும் வசதி செய்து தர வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x