Published : 05 Jan 2018 09:48 AM
Last Updated : 05 Jan 2018 09:48 AM

திருச்சி, தஞ்சாவூரில் உலக நாத்திகர் மாநாடு: இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது

திராவிடர் கழகம், விஜயவாடா நாத்திகர் மையம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் சிறுகனூர் பெரியார் உலகம் ஆகிய இடங்களில் உலக நாத்திகர் மாநாடு இன்று (ஜன.5) தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் குமரேசன் மற்றும் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

திருச்சி, தஞ்சாவூரில் 3 நாட்கள் நடைபெற உள்ள இம் மாநாட்டில், பல்வேறு மாநிலங்கள், பன்னாட்டு அளவில் செயல்பட்டு வரும் பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நாத்திகர் பலரும் பங்கேற்க உள்ளனர்.

முதல் நாள் மாநாடு திருச்சி கே.சாத்தனூரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நாளை (இன்று) முற்பகல் 11 மணிக்கு தொடங்குகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்கிறார்.

தஞ்சாவூர் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 2-ம் நாள் மாநாடு ஜன.6-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. குழந்தைகள், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை கட்டமைத்தல் என்ற தலைப்பில் சிறப்பு அமர்வு நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

மாநாட்டின் 3-ம் நாளன்று (ஜன.7) காலை 6.30 மணிக்கு நாத்திகர் நடைபயணம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா திருச்சி சிறுகனூரில் உள்ள பெரியார் உலகத்தில் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x