

சென்னை: மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் நடைபெற்ற மக்களைத் தேடி மேயர்சிறப்பு முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில் மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாம்களில் மண்டலங்கள் வாரியாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேயர் ஆய்வு செய்தார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய மேயர், ``மக்களைத் தேடி மேயர்சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். தொடர்புடைய துறைகளைச் சார்ந்த மனுக்கள் மீது துறை அலுவலர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விரைந்து முடித்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.
மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர்வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அரசு கேபிள் டிவி, இ-சேவை மையம், சென்னைமாநகர காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த மனுக்கள் மீது தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், துணைமேயர்மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, வட்டாரதுணை ஆணையர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், எம்.பி.அமித், கட்டாரவி தேஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.