

சென்னை: சென்னையில் ஒரே வாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண், சிறுவன் உயிரிழந்தனர். அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த பூஜா (30), ஒரு வாரத்துக்கு முன்பு தீவிர காய்ச்சல் பாதிப்புக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதியானது. மேலும், உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவும், கிருமித் தொற்றால் ஏற்படும் குறை ரத்தஅழுத்தப் பாதிப்பும் இருந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
அதேபோல், பூந்தமல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் டெங்குகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற நேற்று முன்தினம் (அக். 29)சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டெங்குவின்தீவிரத்தால் அன்று இரவே அவர் இறந்தார்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, ``தமிழகத்தில் பருவ மழைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல்காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் கட்டாயம்மருத்துவரின் பரிந்துரையுடன் ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு அல்லாமல் தன்னிச்சையாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே சுய மருத்துவம் மேற்கொள்ளுதல் கூடாது.உரிய நேரத்தில் சிகிச்சை பெறாமல் அலட்சியப்படுத்தும் போதுதான் டெங்கு வைரஸ் உடலில் தீவிர பாதிப்பை ஏற்படுத்திஉயிரிழப்புக்கு வழி வகுக்கிறது'' என்றார்.