Published : 31 Oct 2023 05:43 AM
Last Updated : 31 Oct 2023 05:43 AM
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் 61-வது குருபூஜை விழாவையொட்டி, தமிழக, புதுச்சேரி ஆளுநர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் விழாமற்றும் 61-வது குருபூஜை அரசுவிழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆளுநர் மாளிகையில் முத்துராமலிங்கத் தேவரின் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை நந்தனம், அண்ணாசாலையில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்துக்கு தமிழகஅரசு சார்பில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், டி.ஆர்.பாலு எம்.பி., மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் த.வேலு, தாயகம் கவி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பா.பென்ஜமின், வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், தமிழக காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்.பி., தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பனைமர தொழிலாளர் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கவிஞர் வைரமுத்து உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள், விஜய்மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டத்தலைவர்கள் தாமு, தி.நகர் அப்புனு, அம்பத்தூர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜையையொட்டி ஆளுநர், அரசியல் தலைவர்கள் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என் ரவி: நேதாஜிசுபாஷ் சந்திரபோஸுடன் நெருக்கமாகப் பணியாற்றியவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்பிறந்தநாளை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவரது தியாகங்கள் பாரதத்தை ஒரு சிறந்த தேசமாக உருவாக்க நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்துக்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது என அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணி களை நினைவுகூர்வோம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஏழை மக்களுக்காக தமது சொத்துகள் அனைத்தையும் வழங்கிய வள்ளல்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: முத்துராமலிங்கத் தேவர் காட்டியவழியைப் பற்றி நடக்கும் தமிழ் இளம்தலைமுறைகளாகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்வுக்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம், விவசாயிகள், தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்கள் என, தான்கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்ற சமூக சீர்திருத்தவாதி பசும்பொன் தேவர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT