Published : 31 Oct 2023 05:45 AM
Last Updated : 31 Oct 2023 05:45 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 14 வீடுகள் சேதமடைந்தன. குமரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம்பழத்துறையாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. இதனால் அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 41.91 அடியாக உள்ளது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.70 அடி நீர்மட்டம் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 354 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 172 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 372 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வழக்கமாக அணையின் முழு கொள்ளளவில் 6 அடி குறைவாக தண்ணீர் இருக்கும் போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் அந்த குறிப்பிட்ட அளவை நெருங்கி வருவதால், பொதுப்பணித் துறையினர் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வரும் நிலையில் பொய்கை அணை மட்டும் நீர் வரத்து இல்லாமல் உள்ளது. 42.65 அடி உயரம்கொண்ட இந்த அணையில் 8.60 அடியே நீர்மட்டம் உள்ளது .
மாவட்டம் முழுக்க நேற்றும் சாரல் மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 16 மில்லி மீட்டர்மழை பெய்துள்ளது. இதற்கிடையில் கல்குளம் தாலுகாவில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 14 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொதுப் பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT