

சென்னையில் அதிகரித்து வரும் வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு 10 முக்கிய சாலைகளை அகலப்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகளை சென்னை மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள் ளது. இது குறித்த அறிக்கை ஒரு மாதகாலத்துக்குள் தயாரிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கள் விரைவில் தொடங்கவுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1981-ம் ஆண்டில் 1.2 லட்சமாக இருந்த நகரின் மொத்த வாகன எண்ணிக்கை 2010-ல், 32 லட்சமாகவும், தற்போது 42 லட்சமாகவும் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.
அவ்வப்போது பாலங்கள் கட்டப்பட்டாலும், நகரின் பிரதான சாலைகளை அகலப்படுத்தும் பணி கள் தேவையான அளவு நடைபெற வில்லை. மாறாக, தனியார் நிறு வனங்கள், கடைகள் ஆகியவை அதிக அளவில், சாலைகளை ஆக் கிரமித்தன. இதனால் சாலைகள் மேலும் குறுகிப்போய் போக்கு வரத்து நெரிசல் என்பது நகரில் தொடர்கதையாகிவிட்டது. அதிலும், வடசென்னையில் பேப்பர் மில்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை போன்ற சாலைகளில் நெரிசல் மிக அதிகமாக உள்ளது.
10 சாலைகள்
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, சென்னை நகரில் உள்ள மிக முக்கியமான பத்து சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி முடிவெடுத்தது.
இதனடிப்படையில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் ரெட் ஹில்ஸ் சாலை , பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, காளியம்மன் கோவில் தெரு (சின் மயா நகர்), சாந்தோம் நெடுஞ் சாலை (காரணீஸ்வரர் பகோடா சாலை முதல் டி.ஜி.எஸ். தினகரன் சாலை வரை) , சர்தார் பட்டேல் சாலை (அண்ணா சாலை முதல் மத்திய கைலாஷ் வரை) அடையார் எல்.பி.சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை (சர்தார் பட்டேல் சாலை முதல் பழைய மகா பலிபுரம் சாலை வரை) மற்றும் என்.எஸ்.கே.சாலை, மேற்கு சைதாப் பேட்டையில் உள்ள கோடம்பாக்கம் சாலை ஆகிய 10 சாலைகளை அகலப்படுத்த முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அதற்கான பூர் வாங்க பணிகள் தற்போது தொடங்கப் பட்டுள்ளன. முதல்கட்டமாக இந்த 10 சாலைகளில் எந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள் ளன என்பதை கண்டறிவதற்கான நில அளவைப் பணிகள் ஞாயிற் றுக்கிழமை தொடங்கியது.
இது குறித்து மாநகராட்சி வட்டாரங்கள், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:-
சாலைகளில் என்னென்ன ஆக் கிரமிப்புகள் உள்ளன என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். இந்த ஆய்வறிக்கை ஒரு மாதத்துக்குள் சமர்பிக்கப்படும். அதன்பிறகு அந்த 10 சாலை களையும் அகலப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
இவவாறு அவர்கள் கூறினார்கள்.
பொன்னேரிக்கு சாலை வசதி
சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரியை ஸ்மார்ட் நகரமாக மாற்றப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படி அங்கு ஸ்மார்ட் நகரம் அமையும் நிலை யில் நிறைய ஆலைகள் அங்கு உருவாகும். ஆனால், அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை. மாநக ராட்சியால் இனம் காணப்பட்டுள்ள பல முக்கிய சாலைகள், துரிதகதியில் அகலப்படுத்தப்பட்டால் மட்டுமே ஸ்மார்ட் நகரத்துக்கு வாகனங்கள் எளிதில் சென்று வர முடியும். இல்லையேல் ஸ்மார்ட் நகரம் திட்டம், பெருமளவில் பயனளிக்காது.