Last Updated : 30 Oct, 2023 01:28 PM

 

Published : 30 Oct 2023 01:28 PM
Last Updated : 30 Oct 2023 01:28 PM

புதுச்சேரியில் விரைவில் நர்சிங் கவுன்சில் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் நர்சிங் கவுன்சில் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொது மருத்துமனையில் 370 செவிலியர்களை நிரப்ப உள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி தொடக்க நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார். அதையடுத்து, முதலாண்டு மாணவ, மாணவியருக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் கல்லூரி தொடங்குவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஏனெனில் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி சிறந்த நிலையில் உள்ளது. சென்டாக் கலந்தாய்வில் மருத்துவப் படிப்புக்கு செல்ல அதிக மதிப்பெண் எடுத்தோர் இந்த மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்கிறார்கள்.

இங்கு செவிலியர் கல்லூரி சற்று தாமதாக தொடங்கியுள்ளோம். அதே நேரத்தில் முடிவு எடுத்தவுடன் விரைவாக செயல்படுத்தியுள்ளோம். இங்கு 60 இடங்களும், காரைக்காலில் 40 இடங்களும் கொண்டு வந்துள்ளோம். தகுதியானோரை கற்று தர நியமித்துள்ளோம். உடன் வேலை கிடைக்க வேண்டும் எண்ணமுள்ளோர் செவிலியர் படிக்க வருவார்கள்.

கல்லூரியில் அனைத்து வசதியும் கிடைக்கும். அதிக எண்ணிக்கையில் புறநோயாளிகள் வருவதுடன், தங்கி குணப்படுத்திக்கொள்ள வருவதுமாக இக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. அது நல்ல வாய்ப்பு. படிப்பதும், பணியாற்றி கற்றுகொள்வதும் இப்படிப்புக்கு அவசியம். நோயாளிகள், நோய் தன்மை அறிய முடியும். மருத்துவர்களுக்கு அடுத்து செவிலியர்கள்தான் நோயாளிகளை பார்த்துக்கொள்வார்கள்.

மருந்து சீட்டை பார்த்து சரியாக மருந்து தருவோர் செவிலியர்கள்தான். நோயின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகளின் பிரச்சினைகள், கோபத்துடன் இருப்பார்கள். நோயாளிகள் தன்னை மறந்து மனவேதனையுடன் இருக்கும்போது அவர்களின் கோபத்தைப் பொறுத்து பணியாற்றுவது அவசியம். படித்து முடித்து பணியிலும் சந்தோஷத்துடன் பணியாற்றினால் நோயாளிகள் குணமடைவர். இன்முகத்துடன் பணியாற்றி நாம் பணிபுரியும் முறையில் நோய் குணமாகும். மனம் நன்றாக இருந்தால் செயல் சிறப்பாக இருக்கும்.

மகிழ்ச்சியோடு செவிலியர்கள் பணியாற்றவேண்டும். அந்த அளவு நல்ல பணி இது. மக்களுக்கு பணியாற்றுவதை பொறுத்தே அன்னை தெரசா, நைட்டிங்கேல் என பெயர் சூட்டுகிறோம். அதை மனதில் வைத்து கொள்ளவேண்டும். எந்த சொந்தமும் இல்லாத நோயாளிகளை சொந்தம் போல் பாதுகாப்பவர்தான் செவிலியர். கடமையை இன்முகத்துடன் செய்ய வேண்டும். செவிலியர் கல்லூரி தொடங்க அனுமதி தந்துள்ளோம். நிறைய மருத்துவக் த்கல்லூரி தொடங்க அனுமதி தர தயாராக உள்ளோம். கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவது அரசின் முக்கியக்கடமை. மனிதனை படிப்பு மட்டும்தான் நல்ல மனிதராக உருவாக்கும். கல்வி கற்ற பிறகு வேலை கண்டிப்பாக கிடைக்கும். வேலை கிடைத்தால் வேறு எண்ணத்துக்கு போக வாய்ப்பு ஏற்படாது.

கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அரசு எண்ணம். பள்ளி படிப்பை முடித்தவுடன் மேல் படிப்பு படிக்க, உயர் கல்வி படிக்க வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு தேவையான கல்லூரிகள் புதுச்சேரியில் உள்ளன. உயர்கல்வி இலவசமாக கிடைக்கவும், ஓரளவு கட்டணம் செலுத்தும் வகையிலும் உயர்கல்விக்கிடைக்கிறது.

பிஎஸ்சி நர்சிங் நான்கு ஆண்டு படிப்பு முடிக்கும்போது வெளிநாட்டில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. டிப்ளமோவை விட பட்டப்படிப்பு செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வாய்ப்பு உள்ளது. இதன் மூலமாக புதுச்சேரி பொருளாதார நிலை உயரும் வாய்ப்புள்ளது. நிறைய மருத்துவமனைகள், நிறைய மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றவும் தேவை வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

200 செவிலியர்களை மருத்துவக் கல்லூரியில் எடுக்கவுள்ளோம். அரசு பொது மருத்துவமனைகளில் 170 செவிலியர்களை நிரப்ப உள்ளோம். வாய்ப்பு நிறைய உள்ளது. தேவையான கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். 13 அறுவை சிகிச்சை கூடம் ஒரே தளத்தில், மருத்துவக்கல்லூரியில் கொண்டு வரவுள்ளோம்.

நர்சிங் கவுன்சில் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு 10 சதவீதம் தந்துள்ளோம். அரசே இவர்களுக்கு முழுவதுமாக கட்டணத்தை செலுத்துகிறது. தனியார் கல்லூரியில் சேர்ந்தாலும் கட்டணத்தை அவர்கள் செலுத்த வேண்டியதில்லை. இது வருங்கால அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். நல்ல கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும். அதை அரசு உருவாக்கியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் செல்வம் பேசுகையில், "அரசு மருத்துவக்கல்லூரியில் நர்சிங் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அன்னை தெரசா என்ற நர்சிங் கல்லூரி இருந்தாலும், அரசு மருத்துவக் கல்லூரியிலும் தொடங்கப்பட்டுள்ளது. எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் கல்லூரியை தொடங்குவதில் முதல்வர் உறுதியாக இருந்தார்.

கல்விக்கட்டணம் இல்லாமல் புதுச்சேரியில் 60 பேரும், காரைக்காலில் 40 பேரும் படிப்பார்கள். நர்சிங் படித்தால் உலகம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். எளிதாக வேலை வாய்ப்பு பெறமுடியும். படிக்கும் மாணவர்கள் முதல்வருக்கு நன்றியுடன் இருக்கவேண்டும். " என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர், டீன் ராமசந்திர பட், மருத்துவ கண்காணிப்பாளர். ஜோசப் ராஜேஷ், செவிலியர் கல்லூரி முதல்வர் பிரமிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x