

சென்னை: உலக சிக்கன தினத்தை முன்னிட்டு, அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலக சிக்கன தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,‘‘சிக்கனத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் நாளாக அக்டோபர் 30-ம் தேதிஆண்டுதோறும் “உலக சிக்கன நாள்” என கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமித்தால், அதன்வாயிலாகக் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதுடன், அவ்வப்போது ஏற்படும் எதிர்பாரா செலவினங்களையும் சமாளிக்க இயலும். சேமிப்பின் அவசியத்தை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைக்காக சேமிக்க வேண்டும். எனவே,உலக சிக்கன நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில், மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
சிக்கனமும் சேமிப்பும் அவசியம்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,‘‘ நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் தேவையற்ற ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பையும் மேற்கொண்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது. சிக்கனமும் சேமிப்பும் மிக அவசியம். இந்த வகையில், சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள்பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன.
இவை சேமிப்பவர்களின் குடும்பத்துக்குத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், எதிர்பாராச் செலவுகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுகின்றன. பள்ளிச் சிறுவர்கள் முதல் பெரியோர் வரையிலும் விவசாயிகள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் , சுய தொழில்புரிவோர், மகளிர் போன்ற அனைவரும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயனடையலாம்’’ என தெரிவித்துள்ளார்.