Published : 30 Oct 2023 09:13 AM
Last Updated : 30 Oct 2023 09:13 AM
சென்னை: திமுக ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "1996 - 2001 திமுக ஆட்சியில் போக்குவரத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, 2006 - 2011 திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அதே 2006 - 2011 திமுக ஆட்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வெவ்வேறு கால கட்டங்களில் நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்றது.
பின்னர், இந்த வழக்குகளில் இருந்து, அமைச்சர்கள், அவர்களது மனைவி மற்றும் உறவினர்கள் அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது. இந்த 3 அமைச்சர்களையும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யவில்லை.
திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்து குவிப்பு வழக்குகள் கையாளப்பட்ட விதம் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகள் தொடர்பான சீராய்வு மனு விசாரணையை தாமாக முன்வந்து தொடங்கி உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக ஒரே போல அவசரகதியில் முடித்து வைக்கப்படுகிறது.
மேல் முறையீடு செய்யப்படுவதில்லை. இது அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாக உள்ளது. அமைச்சர் பொன்முடி, தனக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, எடுத்துள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்கால தடை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து, அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த ஊழல் சொத்து குவிப்பு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இந்த வழக்குகளில் தமிழக பாஜகவின் கருத்துகளை உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது. திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை கிடைப்பதை தமிழக பாஜக நிச்சயம் உறுதி செய்யும்." என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT