

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (55). இவரது மனைவி தங்கமணி, மகன்கள் வனராஜ் (28), சரவணன்.
மணிமுத்தாறு 40 அடி கால்வாயை ஒட்டிய பகுதியில் இவர்களுக்குச் சொந்தமான வயல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பேச்சிமுத்து, இவரது மகன் வனராஜ் ஆகியோர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்குச் சென்றனர். இந்நிலையில், வயலை ஒட்டிய ஓடையில் பேச்சிமுத்து, வனராஜ் ஆகியோர் இறந்து கிடந்தது நேற்று அதிகாலை தெரியவந்தது.
தகவலறிந்து வந்த மணிமுத்தாறு போலீஸார், அங்கு விசாரணை மேற்கொண்டனர். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக சிலர் மின்வேலி அமைத்து, அருகில் உள்ள மின் கம்பியில் இருந்து திருட்டுத் தனமாக மின் இணைப்பு கொடுத்திருந்தது தெரியவந்தது. இதை அறியாமல் பேச்சிமுத்து, வனராஜ் ஆகியோர் தண்ணீர் பாய்ச்சியுள்ளனர்.
அப்போது மின் வேலியில் தண்ணீர் பட்டதால் மின்சாரம் பரவி, இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இருவரது சடலங்களையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சட்ட விரோதமாக மின் வேலி அமைத்தவர்கள் குறித்து விசாரிக் கின்றனர்.
ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.