

குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் கைது விவகாரத்தில் திருப்பூர் எஸ்.பி. பொன்னி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ள அடிப்படை முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
குன்னூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய எஸ்.தங்கராஜ் மீது உமா மகேஸ்வரி என்ற பெண் எஸ்.ஐ. மோசடி புகார் அளித்தார். அதன் பேரில் மாஜிஸ்திரேட் தங்கராஜ் மீது திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தங்கராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாஜிஸ்திரேட் கைது சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கறிஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாஜிஸ்திரேட் கைது சம்பவம் தொடர்பாக அப்போதைய திருப்பூர் மாவட்ட எஸ்.பி. பொன்னி, டி.எஸ்.பி.க்கள் சுரேஷ்குமார் (பல்லடம்), பிச்சை (உடுமலைப்பேட்டை) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து பதிவு செய்தது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட வழக்கறிஞர் சங்கங்களும் பல மனுக்களை தாக்கல் செய்தன.
இது தொடர்பாக நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது. வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ஆர்.சி.பால் கனகராஜ், டி.பி.செந்தில்குமார் ஆகியோரும், காவல் துறை அதிகாரிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எம்.மகாராஜா, நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதி ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, மாஜிஸ்திரேட் கைது சம்பவத்தில் போலீஸார் பின்பற்றவில்லை என தெரிகிறது. எனவே, அப்போதைய திருப்பூர் எஸ்.பி. பொன்னி, 2 டி.எஸ்.பி.க்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ள அடிப்படை முகாந்திரம் உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
குன்னூர் மாஜிஸ்திரேட்டை கைது செய்யும் முன்பும், கைது செய்யப்பட்ட பிறகும் நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு தகவல் தெரிவிக்காதது, கைது செய்யப்பட்ட மாஜிஸ்திரேட் தங்கராஜ் தனது வழக்கறிஞரை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படாதது, மாஜிஸ்திரேட்டை கைது செய்ததற்கான அவசியம் ஏற்பட்ட சூழ்நிலை, உச்ச நீதிமன்றம் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை முறைப்படி பின்பற்றினார்களா என்பது குறித்து அவர்கள் 3 பேரும் பதிலளிக்க வேண்டும்.
பல்லடம் எஸ்.ஐ. கிருஷ்ணகுமார், குமாரபாளையம் ஆய்வாளர் கே.சாந்தமூர்த்தி ஆகியோர் தங்களது மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க மட்டுமே செயல்பட்டனர் என்பதால் அவர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.