Published : 30 Oct 2023 04:04 AM
Last Updated : 30 Oct 2023 04:04 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் தற்காலிக மாட்டு தொழுவங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதியில் 226 உரிமையாளர்கள் வளர்க்கும் சுமார் 2 ஆயிரம் மாடுகள்,சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றி திரிவது கணக்கிடப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 853 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. மாடுகள் பிடிக்கும் பணிகளில் 15 மாடு பிடிக்கும் வாகனங்கள், சுமார் 200 பணியாளர்கள், 17 கால்நடை மருத்துவர்கள், 15 மண்டல நல அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை விதிகளை மீறிய மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.78 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
முதல்முறை பிடிக்கப்படும் மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம், 2-ம் முறை பிடிக்கப்பட்டால் ரூ.10 ஆயிரம் என அபராத தொகை அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்ட நாளிலிருந்து 3-ம் நாள் முதல் பராமரிப்புத் தொகையாக நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 மாதங்களில் சாலைகளில் மாடுகளை திரிய விட்ட 5 உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. பிராணிகள் வதைதடுப்புச் சட்டம் மற்றும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளை விக்கும் குற்றத்துக்கு உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமையாளர்கள் இன்றி சுற்றித்திரியும் காளை மாடுகள் கோ சாலைகளுக்கு அனுப்பப்படும். மாடு முட்டி சுந்தரம் என்பவர் உயிரிழந்தார். அவரை முட்டிய மாடு, காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அரும்பாக்கம், கோயம்பேடு, மயிலாப்பூர், திருவல்லிக் கேணி, அண்ணாநகர், நங்க நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பொது மக்களுக்கு அதிக அளவில் தொல்லைகள் ஏற்பட்டு வருவதால், இவ்வாறு மாடுகளை திரியவிடும் 226 கால்நடை உரிமையாளர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாடுகளின் உரிமையாளர்கள் கோரிக்கைப் படி, ஒவ்வொரு பகுதிக்கும் மாட்டுத் தொழுவம் அமைப்பது சாத்திய மற்றது. புறநகர் பகுதிகளில் பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவு சங்கங்கள் இருக்கும் இடத்தின் அருகில் இத்தகைய மாட்டுத் தொழுவங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.
முதற்கட்டமாக தற்காலிகமாக கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் இத்தகைய மாட்டுத் தொழுவங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT