Published : 30 Oct 2023 04:14 AM
Last Updated : 30 Oct 2023 04:14 AM

தி.மலையில் விபூதி பூசுதல், ஆசி வழங்குதல் என்ற பெயரில் கிரிவல பக்தர்களிடம் கட்டாய வசூல் வேட்டை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள ‘திரு அண்ணாமலையை’ 14 கி.மீ., தொலைவு கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடு கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து, பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்கின்றனர். கடவுள் மீதான பக்தர்களின் அதீத நம்பிக்கை மற்றும் இரக்க குணம் காரணமாக கிரிவல பக்தர்களிடம் மோசடி கும்பலின் கைவரிசை தொடர்கிறது. இறைவனை தேடி வந்த சாதுக்கள், யாரிடமும் யாசகம் கேட்பது கிடையாது.

இவர்கள், தங்கள் மனம் மற்றும் கால்போன போக்கில் பயணிக்கின்றனர். இவர்களது செயல்களை பின்பற்றி நடப்பதாக கூறி, பல நூறு பேர் சாது வேடமிட்டு உலா வருகின்றனர். இவர்கள் அனை வரும், கிரிவல பாதையில் தங்கி யாசகம் பெற்று வாழ்கின்றனர். இவர்களுக்கு உணவு மற்றும் காவி உடையை பக்தர்கள் வழங்கு கின்றனர்.

மேலும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வழங்கி மகிழ்கின்றனர். கர்ம வினை தீரும் என்ற நம்பிக்கையில், பக்தர்கள் செய்யும் உதவியை, பலரும் தவறாக பயன்படுத்து கின்றனர். ஒரு சிலர் மட்டும் கிரிவல பாதையில் தங்குகின்றனர். பெரும்பாலானவர்கள் அவ்வப்போது வீடுகளுக்கு சென்று திரும்பு கின்றனர்.

அதாவது, யாசகம் பெறுவது என்பது உடல் வலி இல்லாமல் உழைக்கும் தொழிலாக மாறிப்போனது. இந்நிலையில், பக்தர்களிடம் கட்டாய வசூலில் பல்வேறு மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது. இவர்களது கைவரிசை, பவுர்ணமி நாளில் அதிகளவில் உள்ளது. கோயில் கட்டுவதாக கூறி நன்கொடை வசூலிப்பது, மாட்டுக்கு கூடுதல் கால் என காண்பித்து வசூலிக் கின்றனர்.

வெளியூர்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள், முதியவர்கள் அழைத்து வரப் பட்டு, யாசகம் பெறும் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். மேலும், விபூதி பூசுவதாகவும், ஆசி வழங்குவதாகவும் கூறி, காவி உடையில் மோசடி கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஆண்கள் நெற்றில் விபூதி பூசும் கும்பல், பெண்களிடமும் அத்துமீறுகிறது.

அவர்களது அனுமதி யின்றி, நெற்றியில் விபூதி பூசி, பணம் கேட்டு பின் தொடர்கிறது. குடும்பத்துடன் வருபவர்களை குறிவைத்து வேட்டையாடு கிறது. இவர்களில் பலர் நிதானமின்றி இருப்பதாக பக்தர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “பக்தர்களின் கருணை உள்ளத்தை பலரும் தவறுதலாக பயன்படுத்திக் கொள்கின்றனர். வசூல் வேட்டை யில் பல்வேறு குழுக்கள் உள்ளன. கிரிவல பாதையில் யாசகம் பெறும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுவர்கள் ஆகியோருக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது.

மேலும், விபூதி பூசுவதாகவும் மற்றும் எலுமிச்சை பழத்தை தலையில் வைத்து ஆசிர்வதிப் பதாக கூறி காவி உடை மற்றும் ருத்ராட்சம் அணிந்த போலி ஆசாமிகள் கட்டாய வசூல் செய்வது பகல் கொள்ளையாகும். பணம் கொடுக்கும் வரை பக்தர்களை, அந்த கும்பல் விடுவதில்லை. பெண்களின் நெற்றியில், அவர்களது அனுமதியின்றி விபூதி பூசுகின்றனர். இதனால், பெண் பக்தர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகிறது.

கிரிவல பாதையில் காவல் துறையினரின் பாதுகாப்பு என்பது கிடையாது. பவுர்ணமி கிரிவலம் என்றால், காவல்துறை அதி காரிகளின் முழு கவனமும், அண்ணாமலையார் கோயிலில் தான் இருக்கிறது. கோயிலுக்கு வரும் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைப்பதை தலையாய கடமையாக கருதுகின்றனர். கிரவல பாதையில் கவனம் செலுத்துவது கிடையாது.

இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவிக்கப்பட்டும், பக்தர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்ப தில்லை. பக்தர்களிடம் பகல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் ஆகியோர் முன்வர வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x