

சென்னை: தமிழகத்தில் தாய் சேய் குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த வாழ்வின் முதல் 1,000 நல்நாட்கள் நிதி உதவி திட்டத்தின் கீழ் மகப்பேறு தாய்மார்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவியை நேரடி பணப் பரிவர்த்தனை மூலம் வழங்கும் நிகழ்வை மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத் துறை சார்பில் வரும் நவம்பர்4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும் நல்நாட்கள் நிதி உதவி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 4 முதல் 5 மாதம் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு ரூ.1,000, 2-வது தவணையாக 5 முதல் 6 மாதம் ரூ.1,000, மூன்றாம் தவணையாக 9 மாதம் ரூ.1,000 தரப்படுகிறது. அதன்பிறகு குழந்தை பிறந்த பிறகும் மொத்தம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.5,000 வழங்கப்படுகிறது.
இதுவரை 8,163 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 5,294 பேருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி நேரடி பணப் பரிவர்த்தனை மூலம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுடனான கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டம் தொடர்பான புகார்கள் அந்தந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் தெரிவிக்கலாம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மழைக்கால நோய்களுக்காக வரும் 29-ம் தேதி (இன்று)முதல் டிசம்பர் மாதம் வரை 10ஞாயிற்றுகிழமைகளிலும் 1,000இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. மழைநீர் வடிகால்வாய்களை கட்டி முடிக்கப்பட்டு சிறப்பான நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.