Published : 29 Oct 2023 06:24 AM
Last Updated : 29 Oct 2023 06:24 AM

ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைப்பு: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறையின் ஆணையர் சண்முகசுந்தரம், உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அன்பழகன், அப்சல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிவில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் ஆம்னி பேருந்துக்கு கட்டண நிர்ணயம் இல்லாததால், வாடகைக்கு கார்களை ஒப்பந்த முறையில் எடுத்துச் செல்வதுபோலதான் ஆம்னி பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கூட்டம் நடத்தப்பட்டு, கட்டண குறைப்பு செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டிருந்தோம். அதன்படி, அவர்கள் நிர்ணயித்திருந்த கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் குறைத்து அறிவித்தனர். எவ்வித புகாருக்கும் இடமின்றி ஆம்னி பேருந்துகளை இயக்கினர். பொங்கல் பண்டிகையின்போதும் புகாரின்றி ஆம்னி பேருந்துகளை இயக்கி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி கட்டண குறைப்பு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு ஒருமித்த முடிவாக 5 சதவீத கட்டண குறைப்பு செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு குறைத்த 25 சதவீதத்துடன் மேலும்5 சதவீதம் கட்டணத்தை குறைத்துஆம்னி பேருந்துகளை இயக்குவதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், போக்குவரத்து காவல்துறையின் அறிவுறுத்தலான 100 அடி சாலையில் பேருந்துகளை இயக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளையும் செயல்படுத்த உள்ளனர்.

கடந்த தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது எப்படி கட்டண உயர்வின்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டதோ, அதேபோல் இந்த ஆண்டும் இயக்கவுள்ளனர். இந்த கட்டண குறைப்பை அவர்களது இணையதளத்தில் விரைவில் வெளியிடுவர். கடந்த 2 மாதங்களில் சிலர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தனர். அவர்களுக்கும் தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் காவல்துறை சார்பிலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தி அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து 30 சதவீத கட்டண குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்ததாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஆம்னி பேருந்து கட்டணத்தை பொருத்தவரை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல குளிர்சாதன வசதி இல்லாத பேருந்தில் இருக்கைக்கு ரூ.1960, படுக்கைக்கு ரூ.2380, முறையே கோவை செல்ல ரூ.1720, ரூ.2090, மதுரை செல்ல ரூ.1690, ரூ.2010, தஞ்சாவூர் செல்ல ரூ.1360, ரூ.1500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது உரிமையாளர்கள் நிர்ணயித்த அதிகபட்சமாக கட்டணமாகும். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கட்டணம் நேரத்துக்கு ஏற்ப குறைக்கப்படும்.

அதேநேரம், இதை விடகூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என உரிமையாளர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். இதே போல், குளிர்சாதன வசதிபேருந்துகள், வால்வோ பேருந்துகளுக்கும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த விலை பட்டியலை http://www.toboa.in/, http://www.aoboa.in/ ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x