

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் ‘என் மண் எனது தேசம்’ அமிர்த கலச யாத்திரையின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து எடுக்கப்பட்ட மண் சிறப்பு ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், ‘என் மண், என் தேசம்’ எனும் பிரச்சார இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரத்தின் ஒருபகுதியாக ‘அமிர்த கலச யாத்திரை’ கடந்த அக்.1-ம் தேதி முதல் தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த யாத்திரையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7,500 கலசங்களில் மண் சேகரிக்கப்பட்டு, டெல்லியைச் சென்றடையும். அங்கு தேசிய போர் சின்னம் அருகே, இந்த மண் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பதன் அடையாளமாக டெல்லியில் உள்ள கடமைப் பாதை அருகே மிகப்பெரிய பூந்தோட்டமாக அமைக்கப்பட உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் அமிர்தப் பெருவிழாவின் நிறைவு விழாவாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
388 கலசங்கள்: இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடுமற்றும் புதுச்சேரி நேரு யுவகேந்திரா சங்காதன் சார்பில், 688 பேர் மற்றும் அஞ்சல் துறை சார்பில் 52 பேர்என மொத்தம் 720 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் 388 கலசங்கள் மூலம் டெல்லிக்கு ரயில் மூலம் நேற்று கொண்டு சென்றனர்.
இதை முன்னிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேரு யுவகேந்திரா சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் கே.குன்ஹம்மது, துணை இயக்குநர் ஜே.சம்பத் குமார், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் சென்னை தெற்கு பிரிவின் உதவி ஐ.ஜி. என்.பெருமள்ளு, தெற்கு ரயில்வே சென்னை மண்டலத்தின் மூத்த மண்டல பணியாளர் அதிகாரி எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் அமிர்தகலச யாத்திரையை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
இதேபோல், தாம்பரத்தில் இருந்தும் புதுடெல்லிக்கு அமிர்த கலச யாத்திரை சிறப்பு ரயில் நேற்று புறப்பட்டு சென்றது. இதில் 566 பேர் பயணம் செய்தனர்.