

சென்னை: தொழில் துறையைப் பொறுத்தவரை, அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும் என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் மறைந்த டி.எஸ்.சீனிவாசனின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் மறைந்த டி.எஸ்.சீனிவாசனின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 'தி பெயிண்டட் ஸ்டார்க்' என்ற நூலை வெளியிட்டு பேசியதாவது:
தமிழகத்தின் தொழில்துறை அடையாளங்களில் டிவிஎஸ் முக்கியமானது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் தொழில் மேதை டி.வி.சுந்தரம். தற்போது 80 நாடுகளில் டிவிஎஸ் நிறுவனம் செயல்படுகிறது. வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். அதற்கு அடையாளமாக டிவிஎஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது.
நிர்வாகத் திறன், தொழில் நுட்ப அறிவு, உழைப்பு, புதுமைகளை புகுத்துதல், தொழிலாளர் நலன் என்ற அனைத்தையும் ஒரு சேரப்பெற்றவராக டி.எஸ்.சீனிவாசன் இருந்தார். இதுதான் அவருடைய சிறப்பு. பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் டிவிஎஸ்குழுமம், பல அறக்கட்டளைகளை நிறுவி, தமிழகத்தில் உள்ளஅனைத்து தொழில் நிறுவனங்களும் கிராமப்புற மேம்பாட்டுக்கு பங்களிக்க வேண்டும். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தில் வேணு சீனிவாசன் மற்றும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தலைமை பொறுப்பில் உள்ளனர். திட்டத்தை நான் தொடங்கிய முதல் நாளே ரூ.50 கோடி மதிப்பிலும், இப்போது ரூ.158 கோடி மதிப்பிலும் கொடைகள் வந்திருக்கின்றன.
வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். தொழில் துறையைப் பொறுத்தவரை, அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும். இவ்வாறு பேசினார்.
முன்னதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் பேசும்போது, எனது தந்தை அப்போது 60 ஆயிரம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க உரிமம்பெற்றார். தற்போது 40 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்றுள்ளோம். அறக்கட்டளை வாயிலாக கடந்த 10 ஆண்டுகளில் ரூ.40 கோடிஅளவுக்கு பள்ளி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.20 கோடி அளவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
பாரதிய வித்யாபவன் கோவை கேந்திர தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் கூறும்போது, "சீனிவாசன் முற்போக்கு சிந்தனை கொண்டவர். சமூக நீதியில் நம்பிக்கை கொண்டவர்" என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், இந்து என்.ராம், சுந்தரம் க்ளேடன் ஆலோசகர் லக்ஷ்மனன், டிவிஎஸ் மோட்டார் நிறுவன தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப்: நூற்றாண்டு விழாவில், டிவிஎஸ்சீமா ஸ்காலர்ஷிப் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் ரூ.100 கோடி மூலதன நிதி மூலம் ஆண்டுதோறும் தமிழகத்தைச் சேர்ந்த 500 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. குறிப்பாக, பொறியியல் படிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது.