Published : 29 Oct 2023 06:57 AM
Last Updated : 29 Oct 2023 06:57 AM
கோவை: நிலவில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்று ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கூறினார்.
கோவையில் நேற்று தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய வீரமுத்துவேல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘சந்திரயான் 3’ திட்டத்தின் ஆயுட்காலம் நிறைவடைந்துவிட்டது. சூரியஒளி ஆற்றலைக் கொண்டு மட்டுமே செயல்படும் என்பதால், 14 நாட்களுக்கு மட்டுமே செயல்படும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டது.
வரும் ஆண்டுகளில் கடும் குளிர் நிலவும் சூழலிலும், உள்ளே இருக்கும் இயந்திரங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
‘சந்திரயான்-3' திட்டம் நாட்டின் சாதனையாக மாறியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ மற்றும்பல்ேவறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது.
நிலவில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதைக் கருத்தில் கொண்டுதான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இதற்காக, தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்கியப் பெருமையை இந்தியா அடைந்துள்ளது.
சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய பகுதி அருகேதான், ரஷ்யாவின் விண்கலமும் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக அவர்களின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்குவது எளிதல்ல. தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றையெல்லாம் சமாளித்து, தென்துருவத்துக்கு அருகே லேண்டரை தரையிறக்கினோம். இதுவரை எந்த நாடும் இந்த சாதனையைப் புரியவில்லை.
வரும் ஆண்டுகளில், நிலவில்இருந்து மாதிரிகளை எடுத்துவருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சந்திரயான்-3 திட்டத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. வெப்ப நிலை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலவில் சல்பர் அதிகம் உள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது இஸ்ரோவில் 20 திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இஸ்ரோவில் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். இவ்வாறு வீரமுத்துவேல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT