

ராமநாதபுரம்: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா லட்சார்ச்சனையுடன் நேற்று தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான நேற்று காலை, நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜை, லட்சார்ச்சனையுடன், சிறப்பு பூஜைகளுடன் ஆன்மிக விழா தொடங்கியது.
தொடர்ந்து, மங்கல இசைவாத்தியங்கள் முழங்க தேவர் சிலைக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் தேரோட்டம் நடைபெற்றன. இன்று லட்சார்ச்சனை தொடர்ச்சி மற்றும் அரசியல் விழா நடைபெறுகிறது.
தமிழக அரசு சார்பில் நாளைநடைபெறும் விழாவில் முதல்வர்ஸ்டாலின் காலை 9 மணியளவில் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
விழாவையொட்டி, சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில், தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டிஐஜிதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை மற்றும் 5டிஐஜிக்கள், 25 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 12,000 போலீஸார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.