Published : 29 Oct 2023 04:00 AM
Last Updated : 29 Oct 2023 04:00 AM

திருப்பூரில் இருந்து ஜார்க்கண்டுக்கு தினமும் ரயில் சேவை: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி

அவிநாசி அருகே ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

திருப்பூர்: வட மாநில தொழிலாளர்களுக்காக திருப்பூரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தினமும் ரயில் சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அம்மாநில ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே செயல்படும் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநி லங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடையே கலை இலக்கியம், கலாசாரம், பண்பாடு தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நிறுவன வளாகத்தில் கலாசார மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவரும், பனியன் நிறுவன நிர்வாக இயக்குநருமான கே.எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இயக்குநர் மகேஸ்வரி சுப்பிரமணியன், செயல் இயக்குநர் கார்த்திக் பிரபு, இணை நிர்வாக இயக்குநர் விஷ்ணு பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலாசார மையத்தை திறந்து வைத்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் பேசும்போது, "ஒரு நிறுவனம் தொழில் வளத்துடனும், தொழிலாளர் நலனுடனும் இருந்தால், அந்த நிறுவனம் வளர்வது நிச்சயம். இந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுவதால், அவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப் படுகின்றன.

தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டே உயர் கல்வி பயின்று பட்டம் பெற வழிவகை செய்திருப்பது சிறப்புக் குரியது. தொழிலாளர்களுக்கு சுகாதாரம், தரமான உணவு, மருத்துவம் உள்ளிட்டவை இந்நிறுவனத்தில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிஹார், ஜார்க்கண்ட் போன்ற வட மாநில தொழிலாளர்கள் சென்று வர ஏதுவாக, கோவையில் இருந்து தன்பாத் வரை செல்லும் ரயில் சேவை வாரம் ஒரு முறை மட்டுமே உள்ளது.

தொழிலாளர்கள் நலனுக்காக திருப்பூரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் வரை செல்லும் ரயில் சேவையை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து உதவி செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து தொழிலாளர்களுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x