

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல், சனிக்கிழமை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் அக்ரவால், கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தற்காலிக தலைமை நீதிபதியாக நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுலை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடந்தது. காலை 11.30 மணிக்கு ஆளுநர் ரோசய்யாவும், முதல்வர் ஜெயலலிதாவும் விழா மேடைக்கு வந்தனர். 11.32 மணிக்கு ஏற்பு தொடங்கியது. புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்த குடியரசுத் தலைவரின் கடிதம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், தமிழக அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.கலையரசன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டெல்லியில் 1958-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பிறந்தவர். 1976-ல் பொருளாதார பட்டம் பெற்றார். 1982-ல் சட்டப் படிப்பை முடித்து, டெல்லி பார் கவுன்சிலில் பதிவு செய்தார். சிவில், ரிட், கம்பெனி சட்ட வழக்குகளில் அதிக அனுபவம் பெற்ற இவர், 2001-ம் ஆண்டு மே 3-ல் டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2003-ல் நிரந்தரம் செய்யப்பட்டார். 2013 ஜனவரி 6-ம் தேதி முதல் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.