

மதுரை: ஜாக்டோ - ஜியோ சார்பில் மதுரையில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க. நீதி ராஜா, மு.பொற் செல்வன், அ.ஜோயல் ராஜ், ச.நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.பி.முருகையன் தொடக்கவுரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் நிறைவுரை ஆற்றினார்.
இதில், 28-க்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் அமைப்புகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். கூட்டத்தில், முதல்வர் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நவ.1 மாலை 5 முதல் 6.30 மணி வரை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர்கள் பங்கேற்க வேண்டும்.
நவம்பர் முதல் வாரத்தில் மாவட்டம் முழுவதும் வட்டார அளவில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். நவ.15 முதல் 24 வரை நடைபெறும் ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர் சந்திப்பு பிரச்சார இயக்கத்துக்கு துண்டுப் பிரசுரம், சுவரொட்டி தயார் செய்து ஆயத்தமாக வேண்டும்.
நவ.25-ம் தேதி பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை முன் நடைபெறும் சாலை மறியலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும். டிச.28-ல் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஒட்டுமொத்த ஊழியர்களும் சென்னையில் திரள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.