Published : 29 Oct 2023 04:08 AM
Last Updated : 29 Oct 2023 04:08 AM
ராமநாதபுரம்: சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு பசும்பொன் தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என ராமநாதபுரம் ஆட்சியரிடம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் மாலை ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வராக இருந்த பழனிச்சாமி, கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் இட ஒதுக்கீடான 20 சதவீதத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டார்.
இந்த அரசாணையால் மிகவும் பிற்படுத்தப்பட்ட 118 சாதிகளும், 68 சீர்மரபினர் சாதிகளும் பாதிக்கப்பட்டன. இதனால் குறிப்பாக முக்குலத்தோரில் கள்ளர், மறவர் சமுதாயத்தினர் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்த அரசாணையை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ரத்து செய்தன. இந்த நிலையில், பசும்பொன் தேவர் குரு பூஜையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் கலந்து கொள்வதாக தகவல் வருகிறது.
இவர் வெளியிட்ட அரசாணையால் பாதிப்படைந்த முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கும், பழனிசாமி தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னாள் முதல்வர் பழனிசாமியை பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT