

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு பல் நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன், தங்கை ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
முன்னதாக அவர்களை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து படிப்பை தொடர்வதற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். அத்துடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யும் ஆணையையும் வழங்கினார்.
சத்துணவு திட்ட சமையல் உதவியாளரான இளஞ்சிறார்களின் தாயாரின் விருப்பப்படி, அவர் திருநெல்வேலி நகரில் பணிபுரியும் வகையில் பணி மாறுதல் ஆணையும் வழங்கப்பட்டது. சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, மாநில நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்பி சிலம்பரசன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.