திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழகமும் அழிவுப்பாதையில் உள்ளது: இபிஎஸ்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேருந்து நிலைய பகுதியில் 52 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேருந்து நிலைய பகுதியில் 52 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.
Updated on
1 min read

திருப்பூர்: விவசாயம், நெசவுத் தொழில் திமுக ஆட்சியில் அழிந்து வருகிறது. ஒட்டு மொத்த தமிழகமும் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேருந்து நிலைய பகுதியில் 52 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தபின் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசியதாவது:

திமுக அரசு, பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த பகுதியில் நெசவு, வேளாண் தொழில் அதிகம் உள்ளது. ஆனால் இந்த தொழில் செய்பவர்கள், திமுக அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொப்பரைக்கு அதிமுக ஆட்சியில் விலை உயர்த்தி தரப்பட்டது. ஆனால் திமுக அவர்களை கண்டுகொள்ளவில்லை.

அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண் துறை சிறப்பாக இருந்தது. திமுக அரசு விவசாயிகளுக்கு 2 லட்சம் பம்பு செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும், வராது என தெரியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். அந்தளவுக்கு மின் தடை உள்ளது.

அதேபோல் நெசவாளர் களுக்கு, துணிக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி, விசைத்தறி தொழில் புரிபவர்கள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், விவசாயம், நெசவுத் தொழில் திமுக ஆட்சியில் அழிந்து வருகிறது.

ஒட்டு மொத்த தமிழகமும் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை மாற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும். அதிமுக நிறுத்தும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ்எம் ஆனந்தன், முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in