

சென்னை: கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நிர்வாகத்தின் சென்னை தெற்கு மாவட்ட மேலாளர் (பொறுப்பு) பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடை எண் 29-ல் ஆய்வு மேற்கொண்ட போது விற்பனையாளர் பாபு என்பவர் குறிப்பிட்ட மதுவை அரசு நிர்ணயித்த விலை ரூ.2590-க்கு பதிலாக ரூ.60 கூடுதலாக வைத்து ரூ.2650-க்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விற்பனையாளர்கள் பாபு, இளையராஜா மற்றும் கண்காணிக்கத் தவறிய கடை மேற்பார்வையாளர் ஆர்.சதீஷ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் கடந்த 12-ம் தேதி விசராணை அலுவலர் நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஆய்வின்போது கடை மேற்பார்வையாளர் சதீஷ் தரப்பில் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், விற்பனையாளர் இளையராஜா மதிய உணவுக்கு சென்றதாகவும், 3 மதுபான வகை இருந்ததால் குழப்பம் காரணமாக கூடுதல் விலைக்கு விற்றதாக பாபு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால்... அதே நேரம், மருத்துவமனைக்குச் சென்றதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை, கூடுதல் விலைக்கு விற்பது கூட்டுப் பொறுப்பு,மேலும் நீண்ட அனுபவம் உடையவர் குழப்பமடைந்ததாகக் கூறுவது போன்றவை ஏற்புடையதாக இல்லை என்பதால் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதாக விசாரணை அலுவலர் தெரிவித்துள்ளார். எனவே, 3 பேரையும் நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.