

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், கொசுக்கள்மற்றும் பருவகால மாற்றத்தின் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் மட்டும் 1,198 பேருக்கு டெங்கு பாதிப்புஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில்டெங்குவால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இன்னும் 2 மாதங்களுக்கு ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்குவை பரப்பும் வாய்ப்புள்ளதால், நோய்ப் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை தீவிரநடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் 5,772 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 553 பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளில் 26,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் ஊராட்சிக்கு ஒருசுகாதார அலுவலரும், நகர்ப்புறங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, மருத்துவக் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு சிகிச்சைஅளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவவசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசர கால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.