Published : 20 Jan 2018 10:28 AM
Last Updated : 20 Jan 2018 10:28 AM

மாநகராட்சி அலுவலகங்களில் வார்டு மறுவரையறை வரைவு பார்வைக்கு வைக்கவில்லை: பொதுமக்கள் ஏமாற்றம்

சென்னை மாநகராட்சி சார்பில் வார்டு மறுவரையறை வரைவு வெளியிடப்பட்ட நிலையில், மாநகராட்சி வார்டு மற்றும் பகுதி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாததால், நேற்று அந்த அலுவலகங்களுக்குச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழ்நாடு மறு வரையறை ஆணையச் சட்ட விதிகளின்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளின் எண்ணிக்கை மாறாமலும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து வார்டுகளுக்கும் இயன்ற அளவு சமமான மக்கள்தொகை உள்ளபடி வார்டுகளை மறு வரையறை செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்வதற்கு முன்பு இருந்த மாநகராட்சிப் பகுதியில் உள்ள 107 வார்டுகளை 134 வார்டுகளாகவும், விரிவாக்கத்தின்போது இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 93 வார்டுகளை 66 வார்டுகளாகவும் மறு வரையறை செய்யப்பட்டு, அதற்கான வரைவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இந்த வரைவு விவரங்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி வார்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டிருப்பதாகவும், அதைப் பார்த்து பொதுமக்கள் வரும் 29-ம் தேதிக்குள் கருத்துகளையும், ஆட்சேபணைகளையும் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி யில் உள்ள 35-வது வார்டு மற்றும் 9-வது பகுதி அலுவலகங்கள், மகாகவி பாரதியார் நகரில் உள்ள 37-வது வார்டு அலுவலகம், வியாசர்பாடியில் உள்ள 46-வது வார்டு அலுவலகம் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் சென்று வரைவு விவரங்களைக் கேட்டால், இங்கு வரைவு விவரங்கள் வரவில்லை.

மண்டல அலுவலகத்துக்குச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

பொதுமக்கள் சிலர், “வரைவு விவரங்களைப் பார்க்கவே முடியவில்லை. எங்களால் எப்படி கருத்துகளையும், ஆட்சேபணைகளையும் வரும் 29-ம் தேதிக்குள் தெரிவிக்க முடியும்” என்றனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “அனைத்து வார்டு அலுவலகங்களுக்கும் வரைவு விவரங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. நாளை முதல் அனைத்து வார்டுகளிலும் இருக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x