தேவர் ஜெயந்தி விழா: வாடகை, திறந்தவெளி வாகனங்களில் வர தடை

தேவர் ஜெயந்தி விழா: வாடகை, திறந்தவெளி வாகனங்களில் வர தடை
Updated on
1 min read

ராமநாதபுரம்: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க வருவோர் அனுமதிக்கப் பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து திரும்பிச் செல்ல வேண் டும். வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தேவர் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, திறந்தவெளி வாகனங்கள் மூலமாகவோ, சைக்கிள் மற்றும் நடை பயணமாகவோ வரவும் அனுமதி இல்லை.

சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட காவல் உட்கோட்ட அலுவலகங்களில் முன்அனுமதி பெற்று வர வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள், சாதிமத உணா்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, முழக்கங்களை எழுப்பவோ கூடாது. சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக் கூடாது.

வாகன உரிமையாளா் தணிக்கையின்போது வாகனத்தில் இருக்க வேண்டும். அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் மது பாட்டில்கள், ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது. மேற்கூரையின் மேல் பயணம் செய்யக் கூடாது. வழித்தடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை. பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்ட காவல் துறையில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களிலேயே வந்து, செல்ல வேண்டும். தடை செய்யப்பட்டுள்ள வழித் தடங்களில் செல்லக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அக்.29, 30-ம் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும்.

பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் காவல் நிலையங்களில் முன்னதாகவே மனு அளிக்க வேண்டும். குருபூஜைக்கு வருவோரில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கப்படும்.

காவல்துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் எடுக்கப்படும் அனைத்துப் பாது காப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in