பேருந்து, காவிரி குடிநீர், மோரிப்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு 'ஏங்கும்' சத்தியநாயக்கன்பாளையம் மக்கள்

திருச்செங்கோடு அருகே சத்தியநாயக்கன்பாளையம் திருவள்ளுவர் நகரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால், சிரமத்துடன் அப்பகுதியைக் கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்.
திருச்செங்கோடு அருகே சத்தியநாயக்கன்பாளையம் திருவள்ளுவர் நகரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால், சிரமத்துடன் அப்பகுதியைக் கடந்து செல்லும் மாணவ, மாணவிகள்.
Updated on
1 min read

நாமக்கல்: பேருந்து, காவிரி குடிநீர், மோரிப்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என திருச்செங்கோடு அருகே சத்தியநாயக்கன் பாளையம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு அருகே சத்தியநாயக்கன்பாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் பகுதியில் கழிவுநீர் அதிக அளவில் பெருக்கெடுத்துச் செல்வதால், அப்பகுதியில் கழிவுநீர் செல்ல வசதியாக பெரிய குழாய் அமைத்து, அதன்மீது வாகனங்கள் செல்லும் வகையில் மோரிப்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்னர் மோரிப்பாலம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பின்னர் பணி கிடப்பில் போடப்பட்டதால், கழிவுநீர் சாலையில் தேங்குவது தொடர்வதால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 6 மாதத்துக்கு முன்னர் திருவள்ளுவர் நகர் சாலையில் மோரிப்பாலம் கட்டும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால், கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்துச் செல்வதால், இச்சாலை வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சினை காரணமாக தனியார் பள்ளி வாகனங்கள் கிராமத்துக்குள் வருவதில்லை. மாணவர்கள் 2 கிமீ தூரம் நடந்து அல்லது இருசக்கர வாகனங் களில் குமரமங்கலம் வரை வந்து அங்கிருந்து பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் எலச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதேபோல, எங்கள் கிராமத்துக்குப் பேருந்து வசதி யில்லை. காவிரி குடிநீரும் வருவ தில்லை. இதனால், ஆழ்துளைக் கிணற்று நீரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இதுதொடர்பாக புகார் எழுப்பினாலும் நடவடிக்கை இல்லை. எனவே, கிராம மக்களின் நலன் கருதி மோரிப்பாலத்தை விரைந்து கட்டி முடிப்பதுடன் காவிரி குடிநீர் வசதி, பேருந்து வசதிக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in